ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படம், ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் பின்னர், சுந்தர்.சி திடீரென இந்தப் படத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு ஊகங்களும், சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுவரை இதுகுறித்து விரிவாக கருத்து தெரிவிக்காத குஷ்பூ, சமீபத்திய நேர்காணலில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குஷ்பூ, “சுந்தர்.சி ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகினார். அதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை. அந்த முடிவை எடுக்கும் முழு உரிமையும் இயக்குநருக்கே உள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும், சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவலை தயாரிப்பாளரான கமல்ஹாசனிடம் முதன்முதலில் தெரிவித்தது தான்தான் என்றும் அவர் கூறினார். அப்போது கமல்ஹாசன் டெல்லியில் இருந்ததால், சுந்தர்.சிக்கு நேரடியாக தெரிவிக்கத் தயக்கம் இருந்ததாகவும், நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் தானே தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த தகவலை தெரிவித்ததாகவும் குஷ்பூ விளக்கமளித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இது ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சுந்தர்.சி ஆகிய மூவருக்குள் எடுக்கப்பட்ட முடிவு என்றும், அதுகுறித்து பொதுவெளியில் தேவையற்ற ஊகங்களையோ விவாதங்களையோ உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் இந்தப் படத்தில் குஷ்பூ மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருந்ததாகவும், பின்னர் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு நடிகை நயன்தாரா இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தனது கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அது தனக்கு ஏமாற்றமாக இருந்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த மாற்றங்கள் ரஜினிகாந்தின் விருப்பத்தின்படி நடைபெறவில்லை என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தயாரிப்பாளர்களின் முடிவுகள் காரணமாக கதை மாற்றப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக சுந்தர்.சி அளித்திருந்த ஒரு நேர்காணலிலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற திரையுலகின் இரண்டு பெரும் ஆளுமைகள் இணைந்த ஒரு மிகப்பெரிய திரைப்படத்தை இயக்குவது தமக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.
“கடந்த 16 ஆண்டுகளாக நான் நினைத்தபடி, எனக்குத் தோன்றிய கதைகளை சுதந்திரமாக இயக்கி வந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டும், பெரிய நட்சத்திரங்களும் இடம்பெறும் படத்தில் என்னுடைய கதையை வலியுறுத்தி பேசவோ, விவாதிக்கவோ எனக்குத் தெரியவில்லை. நான் எளிதில் சமரசம் செய்து கொள்வவன்,” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தனது படைப்புச் சுதந்திரத்திற்கும், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கும் இடையே சமநிலை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்ததால், மிகவும் கண்ணியமான முறையில் அந்தத் திரைப்படத்திலிருந்து விலக முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திரைத்துறை வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, சுந்தர்.சி ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்காக திகில் கலந்த வணிக ரீதியிலான ஒரு கதையை உருவாக்கியிருந்தார். ஆனால் முழுமையான திரைக்கதை தயார் செய்யப்பட்ட பிறகு, அதன் இறுதி வடிவம் ரஜினிகாந்துக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, எந்தவித சர்ச்சையும் இல்லாமல் சுந்தர்.சி தாமாகவே அந்தத் திட்டத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் சிலர் சுந்தர்.சியை விமர்சித்ததோடு, “அரண்மனை 5 எடுக்கச் சென்றுவிட்டார்”, “ரஜினிக்கு ஏற்ற கதை எழுதத் தெரியவில்லை” என்ற வகையிலும் கருத்துகளை வெளியிட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குஷ்பூ, தனது கணவரை விமர்சித்தவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து, அவரது கௌரவத்தைப் பாதுகாத்திருந்தார்.

தற்போது சுந்தர்.சி விலகியதைத் தொடர்ந்து, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இறுதியாக, “இது ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சுந்தர்.சி ஆகிய மூவருக்குள் எடுக்கப்பட்ட முடிவு. இதில் பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்க வேண்டாம். சுந்தர்.சி இந்தப் படத்திலிருந்து மிகவும் கண்ணியமான முறையில் விலகினார்,” என்று குஷ்பூ இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
