Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைத்து, கற்றலை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றும் வகையில் பள்ளிக் கல்வியில் விரிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற புதிய பாடத்திட்ட தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாணவர்கள் சுமக்கும் புத்தகப் பையின் எடையை கணிசமாகக் குறைப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், “நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவான சுமையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார். அதுபோல, மாணவர்களின் புத்தகப் பை சுமை குறைந்தால் அவர்களின் மனச்சுமையும் குறையும்” என்று குறிப்பிட்டார்.

புதிய பாடப்புத்தகங்கள் அதிக எழுத்துக்கள் நிறைந்ததாக இல்லாமல், வண்ணப் படங்கள், விளக்கப்படங்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியமான உள்ளடக்கங்களுடன் வடிவமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொண்டு, கற்றலில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

இனி கல்விமுறை ஆசிரியர்களை மையப்படுத்தியதாக இல்லாமல், குழந்தைகளை மையப்படுத்திய செயல்பாடுகள் நிறைந்த (Activity-Based Learning) முறையாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார். குறிப்பாக, மாணவர்கள் கடினமாகக் கருதும் கணிதப் பாடம் இனி கதைகள், விளையாட்டுகள் மற்றும் நடைமுறை செயல்பாடுகள் மூலம் எளிமையாகக் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "என் புள்ளைய 20 பேர் அடிச்சது கோஷ்டி சண்டையா?.." - அமைச்சரின் பேச்சால் கதறிய தாய்!
Republic Tamil

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள STEM (Science, Technology, Engineering and Mathematics) கல்வி முறையுடன் Arts பாடத்தையும் இணைத்து, தமிழ்நாட்டில் STEAM (Science, Technology, Engineering, Arts and Mathematics) கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய கல்வி முறையின் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத் தொழில்நுட்ப உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வியிலேயே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI), பிராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மாணவர்கள் சிறுவயதிலிருந்தே டிஜிட்டல் திறன்களைப் பெறும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய பாடத்திட்டத்தில் கல்வியுடன் மட்டுமல்லாமல், பெண்ணுரிமை, பெற்றோரை மதிக்கும் பண்பு, சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் வாழ்வியல் மதிப்புகள் போன்ற அம்சங்களும் இணைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அறிவை மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

Republic Tamil

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் நாளிதழ் வாசிப்பதற்கென தனி நேரம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். சமீப காலமாக மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை வாசிப்பதை விட மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளதாகவும், இதை மாற்றும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையும் படியுங்க  "TET விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மௌனம் ஏன்?" – 3 லட்சம் ஆசிரியர்களுக்காக அன்பில் மகேஷ் எழுப்பிய சரமாரி கேள்வி!

பாடப்புத்தகங்களில் இடம்பெறும் QR குறியீடுகளை (QR Codes) மாணவர்கள் ஸ்கேன் செய்வதன் மூலம், பாடங்கள் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் விளக்கக் காட்சிகளைப் பார்வையிட்டு எளிதாகக் கற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வகுப்பறைக் கற்றல் மேலும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறும் என கூறப்பட்டது.

பள்ளி மாணவர் சேர்க்கை முழுமையாகத் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், ஆசிரியர் நியமனங்களிலும் திறமை மற்றும் தகுதிக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். ஆசிரியர் நியமனங்களில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“பள்ளி மாணவர்களை அடித்துச் சொல்லிக் கொடுத்த காலம் முடிந்துவிட்டது. இனி ஆடிப் பாடி, மகிழ்ச்சியுடன் கற்றுக்கொடுக்கும் காலம் தொடங்கியுள்ளது” என்று ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் டாக்டர் வி. நாராயணன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பள்ளிக் கல்வித்துறை செயலர் பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

இதையும் படியுங்க  "அமைச்சர்களின் வருகை… அதிரடி அறிவிப்புகள்! 6 சிறப்பு நலத்திட்டங்களுடன் முடிவுக்கு வந்த சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!"
Republic Tamil

கூட்டத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், தமிழகப் பள்ளி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை வளர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்க இஸ்ரோ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டு, உடல்நலம், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் அறிவியல் சிந்தனை ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை செயல்பாடுகள் அடிப்படையிலான கற்றல் முறை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக 4 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் STEAM கல்வி முறை, செயற்கை நுண்ணறிவு கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, அங்குள்ள நவீன கல்வி முறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே இந்த புதிய பாடத்திட்ட மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago