https://republictn.com/

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “நூறு சாமி”. ஏற்கனவே சசி இயக்கிய “டிஷ்யூம்” படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார்.

உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமான முறையில் சொல்லும் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள சசி, தற்போது “நூறு சாமி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுவாசிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ், முனிஷ்காந்த், அஜய் தீஷன், ஜென்சன், திவாகர், அருள்தாஸ், சபிதா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்வதை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது மேடைக்கு வருவதற்கு முன், விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்த மிஷ்கின், பின்னர் அருகில் இருந்த நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அரங்கில் இருந்தவர்களை சில நொடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உடனடியாக சுவாசிகா, மிஷ்கினை எழுப்பி அவரது கைகளைப் பிடித்து நன்றி தெரிவித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பின்னர் பேசிய மிஷ்கின், இயக்குநர் சசி குறித்து உயர்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். “சசி ஒரு அரிதான மனிதர். அவரது சினிமா பார்வை வாழ்க்கையை ஆழமாகக் கவனிக்கும் தன்மை கொண்டது” என்று பாராட்டினார்.

மேலும், “நூறு சாமி” திரைப்படம் குறித்து தனது உதவி இயக்குநர்களுடன் மூன்று மணி நேரம் விவாதித்ததாகவும், ஒரு நல்ல திரைப்படம் பல புதிய சிந்தனைகளையும் விவாதங்களையும் உருவாக்கும் சக்தி கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 hours ago at 23 hours ago