Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

உலக வரைபடம் போர்களால் சிவந்து கொண்டிருக்கிறது. ஈரான் – இஸ்ரேல் மோதல், செங்கடல் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் என மத்திய கிழக்கு நாடுகள் எரிமலைக் குழம்பாய் தகித்துக் கொண்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வால் வல்லரசு நாடான அமெரிக்காவே மந்தநிலைக்கு அஞ்சி நடுங்கும் வேளையில், இந்தியா மட்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. “எந்தப் புயல் வந்தாலும் இந்தியா அசையாது” என்பதை எஸ்பிஐ ரிசர்ச் அறிக்கை ஆதாரங்களுடன் அடித்துச் சொல்கிறது.

பாதுகாப்பு அரணில் பாரதம்
மத்திய கிழக்கின் கொந்தளிப்பு இந்தியாவைத் தாக்கும் என்று உலகப் பொருளாதார நிபுணர்கள் கணித்ததற்கு மாறாக, இந்தியா ஒரு வலுவான பாதுகாப்பு அரணுடன் (Strong Position) இந்தப் போர்க்காலத்தை எதிர்கொள்கிறது. 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8% முதல் 7.1% வரை இருக்கும் என எஸ்பிஐ மதிப்பிட்டுள்ளது. இது வெறும் எண்கள் அல்ல; உலகமே முடங்கிக் கிடக்கும் போது இந்தியா காட்டும் அசுர வேகம். ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் போரின் போது 9% வளர்ச்சியை எட்டிப் பிடித்த இந்தியா, இப்போதும் அதே போன்றதொரு உறுதியைக் காட்டுகிறது. இந்தியாவின் வங்கித் துறை முன்னெப்போதையும் விட இன்று பலமாக இருப்பதே இந்தத் துணிச்சலுக்குக் காரணம்.

இதையும் படியுங்க  பாஜகவின் மாஸ்டர் மூவ்..! திமுக- திரிணாமுல் ஆதரவு..! அடித்து ஆடும் அமித் ஷா..!

அமெரிக்காவிற்கு ஆபத்து? இந்தியாவிற்கு வாய்ப்பு!

வரலாற்று ரீதியாக, எண்ணெய் நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் அமெரிக்கா பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை அமெரிக்கா எரிசக்தித் தன்னிறைவு பெற்றிருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி முடக்கம் அந்நாட்டை அச்சப்படுத்துகிறது. இங்கேதான் இந்தியா தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்துகிறது. வான்வெளி அபாயங்கள் காரணமாக துபாய் மற்றும் அபுதாபி போன்ற நிதி மையங்கள் இன்று நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலைச் சாதகமாக்கி, குஜராத்தின் GIFT City-ஐ உலகளாவிய நிதி மையமாக மாற்ற இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. துபாயில் முதலீடு செய்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) இப்போது தங்கள் பார்வையை இந்தியா பக்கம் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

சவால்கள் இல்லை என்று சொல்ல முடியாது!

என்னதான் இந்தியா வலுவாக இருந்தாலும், சில முட்டுக்கட்டைகள் இருக்கவே செய்கின்றன. காலநிலை மாற்றம் விவசாயத்தைப் பாதித்தால் அது பணவீக்கத்தை 4.5% வரை கொண்டு செல்லக்கூடும். போர் நீடித்தால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) கச்சாப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாட நேரிடும். வளர்ச்சி ஒருபுறம், பணவீக்கம் மறுபுறம் என ரிசர்வ் வங்கி கத்தி மேல் நடக்கிறது. இதனால் வட்டி விகிதங்கள் குறைய நீண்ட காலம் எடுக்கும்.

இதையும் படியுங்க  ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

விமானப் போக்குவரத்து மையமாகும் இந்தியா?

மத்திய கிழக்கின் வான்வெளி போர் மேகங்களால் சூழப்பட்டுள்ளதால், சர்வதேச விமானங்கள் அந்தப் பாதையைத் தவிர்க்கின்றன. இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மாற்றுப் போக்குவரத்து மையங்களாக உருவெடுக்கின்றன. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், இந்திய விமான நிலையங்கள் உலகத்தையே இணைக்கும் பாலமாக மாறும்.

1973 எண்ணெய் தடை, 1979 ஈரான் நெருக்கடி போன்ற காலங்களில் இந்தியா நிலைகுலைந்தது உண்மை. ஆனால், 2026-ன் இந்தியா வேறு! இது டிஜிட்டல் இந்தியா, தன்னிறைவு நோக்கி நகரும் இந்தியா. உலகப் பொருளாதாரம் ஒரு இருண்ட குகைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மட்டும் அந்த இருளைக் கிழிக்கும் ஒற்றைச் சுடராகத் திகழ்கிறது. “இந்தியா உலகை ஆச்சரியப்படுத்துகிறது” என்பது வெறும் புகழ்ச்சி அல்ல; அது நிதர்சனமான உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago