தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் பி. சத்தியபாமா, தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் முற்றிலும் சித்தரிக்கப்பட்டவை என விளக்கம் அளித்துள்ளார்.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்த சத்தியபாமா, அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமூக வலைத்தளங்களில் தாம் பேசியதாகப் பரவி வரும் வீடியோ குறித்து விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாகவும், தேர்தல் செலவுகள் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசியதாகவும் சத்தியபாமா கூறுவது போல் ஒரு ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “எடப்பாடி பத்து பைசா எடுக்க மாட்டாரு… போன தடவ 31 கோடி செலவு பண்ணேன்…” என்பது உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதிவு உண்மையானது அல்ல என்றும், தொழில்நுட்ப உதவியுடன் குரல் மற்றும் காட்சிகள் மாற்றப்பட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ என்றும் சத்தியபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தைய இரவில், பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் இந்தப் பதிவுகள் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக சத்தியபாமா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தனது தேர்தல் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எதிர்தரப்பினர் இந்தப் பதிவுகளைப் பரப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய அவதூறு மற்றும் சித்தரிக்கப்பட்ட பதிவுகள் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், தொகுதி மக்கள் தெளிவாக இருப்பதாகவும் சத்தியபாமா கூறியுள்ளார்.
முன்னதாகவும், சத்தியபாமா அழுதது தொடர்பாக அவரது மகன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதற்கான உண்மையான காரணத்தை விளக்கியிருந்தார்.
இதற்கிடையே, அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சத்தியபாமாவுக்கு, தேர்தல் பிரசாரத்தின்போது தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் எதிர்ப்புகளும் கேள்விகளும் எழுந்தன. அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அவர், பின்னர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதையடுத்து தாராபுரம் தொகுதி காலியானதால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் சத்தியபாமாவை எதிர்த்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதேவேளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் தேர்தல் பிரசாரத்தின்போது சத்தியபாமாவின் தோற்றத்தை குறிப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவர் சத்தியபாமாவை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” எனக் குறிப்பிட்டு பேசியது உருவகேலி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
எனினும், தாம் உருவகேலி செய்யும் நோக்கில் பேசவில்லை என திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் அரசியல் ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன.
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சத்தியபாமா தொடர்பாகப் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு அது எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களங்களில் ஒன்றாக தாராபுரம் இடைத்தேர்தல் அமைந்துள்ள நிலையில், சத்தியபாமாவின் கட்சி மாற்றம், தேர்தல் பிரசாரத்தின்போது எழுந்த எதிர்ப்புகள், மு.க.ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சித்தரிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆகியவை காரணமாக தாராபுரம் தேர்தல் களம் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.
