தமிழக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை (செப்டம்பர் 28) தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை வாய்ப்புள்ள 19 மாவட்டங்கள்
வட மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு வலுத்துள்ளது. நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளன.
இடி, மின்னல் மற்றும் காற்றின் வேகம்
மழை பெய்யும் சமயங்களில், மணி நேரத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், ஆங்காங்கே இடி-மின்னலுடன் கூடிய சாரல் மற்றும் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் மழை மேகங்கள் திரண்டு திடீர் மழை பொழியக்கூடும். அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்களையும், நெல் மூடைகளையும் பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.மழை பெய்யும்போது மரங்களின் அடியிலோ, திறந்தவெளிகளிலோ, மின்கம்பங்களுக்கு அருகிலோ நிற்பதைத் தவிர்க்கவும். மலைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறச் சாலைகளில் பயணிப்போர் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, கவனமுடன் இயங்குவது நல்லது.

