மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தவறானவர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சிக்கினால், அது சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு பேராபத்துமிக்க மரண ஆயுதமாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளார்.
மேலும், இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க உலக நாடுகளின் அரசாங்கங்கள் உடனடியாகத் தலையிட்டு, கடுமையான சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவறான எண்ணம் கொண்டவர்கள், அதிநவீன AI கருவிகளைப் பயன்படுத்தி எளிதாக உயிரி ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தகவல்களைப் பெறுவதுடன், அவற்றைச் செயல்படுத்தவும் முடியும் என்று பில் கேட்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள் (Power Grids) மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது AI மூலம் சைபர் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கான செலவும் உழைப்பும் மிகவும் குறைவாக இருப்பதால், இது உடனடி ஆபத்தாக உருவெடுத்துள்ளதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். மனித வரலாற்றில், தீய எண்ணம் கொண்ட மனிதர்களும் அதிநவீன AI கருவிகளும் இணைவதைப் போன்ற ஒரு சக்திவாய்ந்த பேரழிவு ஆயுதம் இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பில் கேட்ஸின் இந்த எச்சரிக்கை திடீரென எழுந்ததல்ல. சமீபகாலமாக AI துறையில் உள்ள முன்னணி ஆராய்ச்சியாளர்களே இந்தத் தொழில்நுட்பம் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். முன்னணி AI நிறுவனமான Anthropic-இல் பணியாற்றிய ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) என்ற ஆய்வாளர், “AI நிறுவனங்கள் சூப்பர்-இண்டலிஜென்ஸ் (Super-intelligent AI) தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக ஓடி, நம் உயிரோடு விளையாடுகின்றன” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Anthropic நிறுவனத்தின் மற்றொரு முன்னணி ஆய்வாளரான இவான் ஹூபிங்கர், “அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த AI தொழில்நுட்பத்தால் மனிதகுலமே ஒட்டுமொத்தமாக அழிவதற்கு 10 சதவீதத்திற்கும் மேல் வாய்ப்புள்ளது” என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார். AI நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொள்ளும் சுயக்கட்டுப்பாடுகள் (Self-regulation) இந்த ஆபத்தைத் தடுக்கப் போதாது என்றும், சட்ட அமலாக்கத் துறையும் அரசியல்வாதிகளும் உடனடியாகத் தலையிட்டு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anthropic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடே, OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரும் AI வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சர்வதேச விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பில் கேட்ஸ் தனது Gates Notes பக்கத்தில் எழுதிய கட்டுரையில், இந்த ஆபத்துகளைத் தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த எச்சரிக்கையை விடுப்பதற்கு மிக முக்கியக் காரணமாக ஒரு சமீபத்திய சம்பவம் பார்க்கப்படுகிறது.
OpenAI நிறுவனம் தனது தன்னாட்சி AI ஏஜென்ட்களை (Autonomous AI Agents) சோதித்துப் பார்த்தபோது, அவை நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை மீறி தப்பித்து, ‘Hugging Face’ என்ற தளத்தின் உள்கட்டமைப்புக்குள் நுழைந்து, சில அங்கீகரிக்கப்படாத சைபர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவம் AI நிபுணர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பில் கேட்ஸ் அரசாங்கங்கள் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா, AI நிறுவனங்களே தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் பேசியுள்ளார். “AI கோடுகளில் ஏதேனும் பெரிய ஆபத்தை உணர்ந்தால், அந்த ஷோவை உடனே நிறுத்துங்கள் (Stop the show)” என்று அவர் AI நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய அமெரிக்கக் கருத்துக்கணிப்பு ஒன்றில், 69 சதவீத மக்கள் AI தொழில்நுட்பத்தால் மனிதகுலத்திற்கு பெரும் ஆபத்து இருப்பதாக நம்புவது தெரியவந்துள்ளது. அதேபோல், 59 சதவீத மக்கள் AI தொழில்நுட்பத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
AI தொழில்நுட்பம் உண்மையில் ஒரு மனிதகுல இரட்சகனா அல்லது பில் கேட்ஸ் கூறுவது போல் பேரழிவு ஆயுதமா என்ற விவாதம், தற்போது சிலிக்கான் வேலி முதல் வாஷிங்டன் வரை தீவிரமாகப் பரவி வருகிறது.
