Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

thirupparankundram

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் அவுலியா தர்காவில், உயர் நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி உணவளிப்பதற்கான சமையல் பொருட்களைக் கொண்டு செல்ல காவல்துறையினர் தடை விதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான நடைமுறை
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் பாரம்பரியமாக வழிபாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் முறைதாரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகின்றனர். இதன்படி, ஏழு நாட்களுக்கு ஒருமுறை முறைதாரர்கள் மாறுவது வழக்கமான நடைமுறையாகும்.

இந்நிலையில், நேற்று காலை தர்காவின் தற்போதைய முறைதாரரான அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், மலையில் தங்கியிருக்கும் நாட்களில் சமைத்து உண்பதற்காக அரிசி, தக்காளி, வெங்காயம், வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றுள்ளனர்.

தர்கா நிர்வாகிகள் கொந்தளிப்பு
மலைப் பாதையில் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சமையல் பொருட்களை மலைக்கு மேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக் கூறி அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படியுங்க  திருவள்ளூர் விபத்து: மரணப் பிடியிலிருந்து தப்பிய 13 பெண் தொழிலாளர்கள்

காவல்துறையின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த தர்கா நிர்வாகிகள், “தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறித் தங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மலையில் தங்கியிருக்க உணவு சமைக்க அனுமதி மறுக்கப்பட்டால், தர்காவின் சாவியை காவல் நிலையத்திலேயே ஒப்படைக்கப் போவதாகக் கூறி கோபத்துடன் திரும்பினர்.

இரண்டாம் கட்ட முயற்சி
சிறிது நேரத்திற்குப் பிறகு, தர்கா நிர்வாகிகள் சமையல் பொருட்களுடன் மின்அடுப்பையும் எடுத்துக்கொண்டு மீண்டும் மலைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை மீண்டும் மறித்து அனுமதி மறுத்தனர். இதனால் தர்கா நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவு
”திருப்பரங்குன்றம் மலை மீது உணவு சமைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் தெளிவான தடை உத்தரவு உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சமைக்கத் தேவையான அத்தியாவசிய தானியங்கள் அல்லது அடுப்புகளை எடுத்துச் செல்ல முடியாது. பேரிச்சம்பழம், பிஸ்கட் மற்றும் பழங்கள் போன்ற உடனடியாக உட்கொள்ளக்கூடிய உலர்ந்த பலகாரங்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உண்டு” என வாக்குவாதத்தின் போது நிலமையை காவல்துறையினர் விளக்கிக் கூறினர்.

இதையும் படியுங்க  செப்டம்பர் 11-ல் ஸ்தம்பிக்கப்போகும் வங்கிகள்! SBI கொடுத்த அதிரடி வார்னிங்!

காவல்துறையினரின் சட்டரீதியான விளக்கத்தை ஏற்றுக் கொண்ட தர்கா நிர்வாகிகள், சில மணி நேரங்களுக்குப் பிறகு பழங்கள், பேரிச்சம்பழம் மற்றும் பிஸ்கட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தர்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago