Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay Rangasamy

”தமிழக முதலமைச்சர் விஜய் என்னோட சிஷ்யன்.. எங்களுடைய உருவாக்கம் தான் விஜய்” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருவதாக காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாநில அந்தஸ்து, உள்ளாட்சித் தேர்தல் பற்றி எந்தவித அறிவிப்பும் இடம் பெறவில்லை. புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநாடு, அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது. 2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய்யும் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. புதுச்சேரியிலும் முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்திப்பதில்லை. விஜய் தன்னோட சிஷ்யன் என்றும் எங்களுடைய உருவாக்கம் தான் விஜய் என்றும் முதலமைச்சர் ரங்கசாமியும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் காவிரி நதி நீரை கொண்டு வராத முதலமைச்சர் ரங்கசாமி எப்போது கொண்டுவரப் போகிறார்? புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தொகுதியை தவெக- விற்கு விட்டுக் கொடுப்பார். தேவை என்றால் வேட்பாளரை கூட அவரே கொடுப்பார். மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு கிடைக்காது என்று தெரிந்தே மாநில அந்தஸ்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக முதலமைச்சர் ரங்கசாமி நகைச்சுவை செய்து வருகிறார்.

இதையும் படியுங்க  "ஆரம்பம் அதிரடி... ஆனா வாக்குறுதிகள் எப்போ? CM விஜய்யின் 100 நாள் ஆட்சிக்கு கௌதமன் போட்ட மார்க்!"

வலி வரும் போது மருந்துகளை தடவுவது போன்று அவருக்கு எப்போது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் மாநில அந்தஸ்தை பற்றி பேசி வருகிறார். இந்தியாவிலேயே மிக மோசமான சட்டமன்றம் புதுச்சேரி சட்டமன்றம் தான். ஆட்சி, அதிகாரம் முழுவதும் அமைச்சர் நமச்சிவாயம் கையில் தான் உள்ளது. சட்டப்பேரவையில் யார் எதிர்க்கட்சி? யார் ஆளுங்கட்சி என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியாக நடந்து கொள்ள வேண்டிய திமுகவினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். மொத்தத்தில் மாமனார் ரங்கசாமிக்கும், மருமகன் நமச்சிவாயத்திற்கும் இதுவரை ஹனிமூன் முடியவில்லை” என கடுமையாக சாடினார்.

பி.சக்திவேல் புதுச்சேரி செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago