பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி ஒரு ஐரோப்பிய குடும்பத்தில் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படும் செய்திகளை, கராச்சி மேயரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவருமான முர்தசா வஹாப் நிராகரித்துள்ளார். அவர் அந்தச் செய்திகளை “தவறானவை, ஆதாரமற்றவை” என்று விளக்கமளித்துள்ளார்.
பிலாவலின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, வஹாப் எக்ஸ்தளத்தில் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, தனது மகனின் திருமணத்திற்கான தேதியை விவாதித்து இறுதி செய்வதற்காக, சுவிட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய இறையாண்மை கொண்ட நாடான லீக்டன்ஸ்டைனுக்குப் பயணம் செய்ததாக வதந்திகள் பரவின.
சில தகவல்கள், பிலாவலின் வருங்கால மணமகள் 26 வயதான ஆஸ்திரியாவின் முன்னாள் பேரரசி குளோரியா வான் ஹாப்ஸ்பர்க் என்று கூறின. குளோரியா வான் ஹாப்ஸ்பர்க், ஆஸ்திரியாவின் பேரரசர் கார்ல்- ஃபிரான்செஸ்கா வான் தைசென்-போர்னெமிசா ஆகியோரின் மகளும், ஹாப்ஸ்பர்க்-லொரைன் வம்சத்தின் உறுப்பினரும் ஆவார். மேலும் அவர், ஆஸ்திரியாவின் கடைசி ஆட்சிப் பேரரசரும், ஹங்கேரியின் மன்னருமான முதலாம் கார்லின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
இந்த ஊகங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட உருது நாளிதழான ‘டெய்லி அவுசாஃப்’, பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியிட்டது.
ஜனாதிபதி சர்தாரி இது தொடர்பாக ஐரோப்பாவில் ஒரு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அந்த தகவல் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்த அறிக்கை பின்னர் நீக்கப்பட்டது. ஆகஸ்ட் 27 அன்று, ஜனாதிபதி அலுவலகம் எக்ஸ் தளப்பதிவில் சர்தாரி “தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்” என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் அப்பயணத்தின் நோக்கம் குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.
நிச்சயதார்த்தம், திருமணம் குறித்த தகவல்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் மறுத்தார். பிலாவலின் நிச்சயதார்த்தம், ருமணம் குறித்த ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில் வஹாபின் இந்த அறிக்கை வெளியானது. அவர் இந்த தகவல்கள் தறானவை, ஆதாரமற்றவை” என்று நிராகரித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஒரு ஐரோப்பியக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய தகவல்களை அவர் மறுத்தார்.
38 வயதான பிலாவல், ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரியின் மகன் ஆவார். இதுவரை, பிலாவலோ அல்லது அவரது குடும்பத்தினரோ இந்தத் தகவல்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
