தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுவதற்குப் பின்னால் இருந்ததாகக் கூறப்படும் மெகா மோசடி மற்றும் இடைத்தரகர்களின் முறைகேடுகள் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளன.
இந்த முறைகேடுகள் தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் 13,580 இடைத்தரகர்களும், அவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட 65 ரயில்வே ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், 2023ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் தட்கல் டிக்கெட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது ரயில்வே சட்டப்பிரிவு 143-ன் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் போலி மென்பொருட்கள் மற்றும் முறைகேடான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகக் கூறப்படும் 13,580 இடைத்தரகர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) கைது செய்துள்ளனர்.
அதேபோல், ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்காமல், இடைத்தரகர்களுக்கு சாதகமாக தட்கல் டிக்கெட்டுகளைப் பெற்றுத் தந்ததாகக் கூறப்படும் 65 ரயில்வே ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி
பொதுமக்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில், IRCTC இணையதளம் மற்றும் செயலி முடங்குவது அல்லது நீண்ட நேரம் லோடிங் ஆவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது வழக்கமாக இருந்தது. இதற்குப் பின்னணியில் இடைத்தரகர்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப முறைகேடுகளும் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ANMS’, ‘MAC’, ‘Jaguar’ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மென்பொருட்கள் மூலம் CAPTCHA, வங்கி OTP போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மிகக் குறுகிய நேரத்தில் கடந்து, தட்கல் டிக்கெட்டுகளைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
சாதாரண பயணிகள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வதற்குள், தானியங்கி மென்பொருட்கள் மற்றும் பாட்டுகள் நூற்றுக்கணக்கான பயணிகளின் தகவல்களை மில்லிசெகண்டுகளில் ஆட்டோ-ஃபில் செய்து டிக்கெட்டுகளைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான போலி கணக்குகள் முடக்கம்
தட்கல் டிக்கெட்டுகளை மொத்தமாகப் பதிவு செய்வதற்காக தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சுமார் 2.5 கோடி போலி பயனர் கணக்குகளை IRCTC கண்டறிந்து நீக்கியுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் சைபர் பாதுகாப்பு மற்றும் ஆதார் சரிபார்ப்பு முறைகள் மூலம் 3.03 கோடிக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய மற்றும் போலியான IRCTC பயனர் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மோசடிப் பேர்வழிகள் போலி கணக்குகளை உருவாக்கப் பயன்படுத்திய 12,819 தற்காலிக மின்னஞ்சல் டொமைன்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலிலும் ரயில்வே நிர்வாகம் புகார்களைப் பதிவு செய்துள்ளது.
ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
தட்கல் டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்க, ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்களது IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவின்போது ஆதார் OTP சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தட்கல் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே டிக்கெட் ஏஜெண்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுக்காக ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய டோக்கன் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டி-பாட் பாதுகாப்பு
இடைத்தரகர்கள் பயன்படுத்தும் அதிநவீன மென்பொருட்கள் மற்றும் தானியங்கி பாட்டுகளைத் தடுப்பதற்காக IRCTC இணையதளத்தில் ‘அகாமை’ (Akamai) என்ற ஆண்டி-பாட் பாதுகாப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது உண்மையான பயணியா அல்லது தானியங்கி மென்பொருளா என்பதை விரைவாகக் கண்டறிந்து, சந்தேகத்திற்குரிய கணக்குகளை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக அதிக நெரிசல் காணப்படும் 322 முக்கிய ரயில்களில் பொதுமக்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு இடைத்தரகர்கள் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி பயனர் கணக்குகளை உருவாக்கியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மொபைல் எண் மற்றும் ஆதார் கட்டாயச் சரிபார்ப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய கணக்குகள் உருவாக்கப்படுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கும் நடவடிக்கை
தட்கல் டிக்கெட் முறைகேடுகளைத் தடுப்பதுடன், டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்பவர்கள் மீதும் ரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2.16 லட்சம் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து ரூ.562.40 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய IRCTC இணையதளம்
தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சர்வர் முடக்கம் மற்றும் லோடிங் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயனர்கள் உள்நுழைந்தாலும் தடையின்றி செயல்படும் வகையில் இந்த புதிய இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தட்கல் டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 3 கோடிக்கும் அதிகமான போலி பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2.15 கோடி மதிப்பிலான முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், தங்களது சொந்த IRCTC கணக்கைப் பயன்படுத்தி மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆதார் சரிபார்ப்பு, ஆண்டி-பாட் தொழில்நுட்பம், போலி கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
