பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், அவரது மறைந்த தாயாரைப் பற்றியும் அவதூறான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படும் ருச்சிகா சிங் என்ற பெண், தனது செயலுக்காக ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
டெல்லியின் கன்னாட் பிளேஸ் (Connaught Place) பகுதியில் நடைபெற்ற சி.ஜே.பி. (CJP) அமைப்பின் போராட்டத்தின்போது, அங்கு கூடியிருந்த சிலரின் தூண்டுதலால் உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரைப் பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி, அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “எனக்கு 15 வயதுதான். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. இதுதான் என்னுடைய முதல் மற்றும் கடைசி தவறு. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கைகளைக் கூப்பி அழுதபடியே மன்னிப்புக் கேட்டுள்ளார்.
எனினும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) அவரது வயது 25 எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் மீது டெல்லி மற்றும் நொய்டா காவல்துறையினர் ‘ஜீரோ எஃப்.ஐ.ஆர்.’ (Zero FIR) பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த அவதூறுப் பேச்சு தனக்கு “பண்பாட்டு ரீதியான அதிர்ச்சியை” (Cultural Shock) ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் பெண் மீது எந்தவித தண்டனை நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“வழிதவறிய இந்த இளைஞர்களை நாம் தண்டிக்கக் கூடாது. அவர்களைக் கட்டியணைத்து நல்வழிப்படுத்த வேண்டும். சிறுவயதில் தவறுகள் நடப்பது இயல்பு. அந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள இளமைப் பருவம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் அவர்களை அலைக்கழிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்துவதே சமூகமாகிய நமது கடமை” என்று பிரதமர் மோடி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அவதூறு சம்பவம், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23-ஆம் தேதி தனது நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தபோது, சில குழுக்கள் பிரதமருக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அவர்களின் தூண்டுதலுக்கு ஆளாகியே தானும் அவ்வாறு பேசியதாகவும் ருச்சிகா சிங் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அதில், இந்தச் சம்பவத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அந்தப் பெண் வெளியிட்ட மன்னிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, இனி இதுபோன்ற தவறுகள் நிகழக்கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், மன்னிப்பு கேட்டிருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் அதன் நடைமுறையின்படி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
